யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்களையும், மனுதாரரின் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு தொடர்பாக முதலில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற விவகாரங்களை பின்னர் கருத்தில் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டனர். மேலும், எங்களை விமர்சிக்காதீர்கள் என கூறவில்லை, ஆனால் அதற்கு என ஒரு வரைமுறை உள்ளது என நீதிபதிகள் கூறினர். எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் எப்படி இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
மேலும் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இடைப்பட்ட காலத்தில் அவர் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







