ராஜீவ் காந்தி வழக்கு; 6 பேர் விடுதலை – தலைவர்கள் கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேர் இன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த விடுதலை குறித்து தலைவர்கள் சிலர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.  ராஜீவ் காந்தி  கொலை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேர் இன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த விடுதலை குறித்து தலைவர்கள் சிலர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். 

ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர்,  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து  பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற 6 பேரும் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன்,  முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விடுதலை குறித்து தலைவர்கள் பலர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர்.

நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ் சமூகத்திற்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கக்கூடிய தீர்ப்பாக அமைந்துள்ளது. பேரறிவாளனின் விடுதலையை வரவேற்றபோது, மீதமுள்ள 6 பேரின் விடுதலையை எதிர்நோக்கியிருந்தோம். உச்சநீதிமன்றம் இந்த ஏக்கத்தை தணிக்கக்கூடிய வகையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆளுநர் செய்யவேண்டிய கடமையை, இன்று உச்சநீதிமன்றம் செய்துள்ளது. ஆளுநர் வேண்டுமென்றே இந்த 6 பேரின் விடுதலையை கிடப்பில் போட்டார், மெத்தனம் காட்டினார் என்பது தமிழ்ச் சமூகத்தின் கணிப்பு. ஆனால் அதைத் தாண்டி உச்சநீதிமன்றம் இன்று இந்த விடுதலையை வழங்கியுள்ளது. ஆகவே தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடிய மனித உரிமை ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த விடுதலை குறித்து நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, “இந்த வழக்கு இவ்வளவு நாட்கள் நீடித்திருக்க வேண்டிய தேவையே இல்லை. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில், இந்த 6 பேருக்கும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. மற்றவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆகவே இந்த கொலையை, பழிவாங்கும் கொலையாகத்தான் பார்க்க வேண்டும். இதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பொருந்தாது என்று தெளிவாக சொல்லப்பட்டது.

இந்த வழக்கில் மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட பின்னரும், ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார். பேரறிவாளனின் விடுதலைக்குப் பிறகும், மற்ற 6 பேரை விடுதலை செய்ய ஆளுநர் காலம் தாழ்த்தியது வருந்தத்தக்கது. நெடுநாள் சிறையில் வாடியவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது” என்று கூறினார்.

நளினி உட்பட 6 பேரின் விடுதலை குறித்து நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த கவிஞர் அறிவுமதி, “தமிழர்களின் மிக உயர்ந்த விழுமியச் சொல் என்றால் அது அறம் என்ற சொல்தான். அந்த அறத்தின் பார்ப்பட்ட ஒரு காலம் கடந்த விடுதலை தான் இது என்றாலும் கூட, தம்பிக்கு ஏற்கனவே கிடைத்த இந்த அறக்கதவு திறத்தல், இன்று 6 தமிழர்களுக்கும் கிடைத்திருப்பது உலக தமிழர்களுக்கான ஒரு ஆறுதல். காலம் கடந்தாலும் அறம் வெல்லும் என்ற நாகரிகமான நடைமுறை, இந்த 6 பேருக்கான விடுதலை. உலகத் தமிழர்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.