மதுபானங்கள் பரிமாற வழிவகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை -உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகைசெய்யும் திருத்த விதிகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள்,…

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகைசெய்யும் திருத்த விதிகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதில் திருத்தும் செய்து, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சர்வேத கருத்தரங்கில் மட்டும் மதுபானங்கள் விநியோகம் செய்ய அரசு அனுமதி என அறிவிப்பு வெளியானது.

வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என்ற அறிவிப்பு எதிராக சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை எதிர்த்துத் தான் வழக்கு தொடர முடியும் என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.

இதற்கு பதில் கூறிய மனுதாரர் தரப்பு, நாங்கள் சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டிகள் என அனைத்துக்கும் சேர்த்து தான் தடை கேட்கிறோம் எனவும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்குக் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் வருவார்கள் ஆதலால், தமிழக அரசின் புதிய அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்ததனர். மேலும், இது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.