கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் ஆற்றுநீர் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள பல பகுதிகளில்
கடந்த ஒரு வார காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் அவதியுறும் பொதுமக்கள்
பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வரும் நீரும் தடைப்பட்டதால் அவதியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் பேரூராட்சியின் ஆர்.சி தெருவிற்கு உட்பட்ட பொதுமக்கள் இன்று காலை திடீரென களியக்காவிளை-மலையடி சாலையில் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
—வேந்தன்







