முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

பேரறிவாளன் விடுதலை வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார்.

எழுவர் விடுதலை விவகாரத்தில் 2 அல்லது 3 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பது குறித்து காலம் தாழ்த்திய செயல் என குறிப்பிட்ட நீதிபதிகள், இது குறித்து மத்திய அரசு என்ன கூற விரும்புகிறது என கேள்வி எழுப்பினர்.

அதோடு, அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், இந்த விவகாரத்தில் விடுதலை தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டார். ஒரு வழக்கு மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு அதில் தண்டனை விதிக்கப்பட்டால், அந்த விவகாரத்தில் நிவாரணம் வழங்கும் முடிவு மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ்தான் வரும் என கூறினார்.

மேலும், மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனை விதிக்கப்பட்டால், அந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவரை தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது தொடர்பான முடிவை மாநில அரசுகள் எடுக்கலாம் என்றும், ஆனால் பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மத்திய விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்படும் வழக்குகளில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளதாக நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டால், கடந்த 75 ஆண்டுகளில் ஐபிசி குற்றங்களில் வழங்கப்பட்ட ஆளுநரின் மன்னிப்பு அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ஒரு மாநில அமைச்சரவை தனக்குரிய சட்ட அதிகாரத்தின் கீழ் முடிவெடுத்து ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பும் விஷயம் மீது ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது எனகுறிப்பிட்டனர். அதன்படி, இந்த விவகாரத்தில் ஒரு நபரை விடுவிக்கவும் விடுவிக்க மறுக்கவும் தனிப்பட்ட முறையில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர் என்றும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து, மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில் சட்டவிதிகளை மீறக்கூடியதாக அமைச்சரவையின் முடிவு இருக்குமானால், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தெரிவித்தார்.

அப்போது, மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், அவருக்கு அதன் மீது முடிவு எடுக்க அதிகாரம் இல்லை என்றும், ஒப்புதல் அளிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்த ஆளுநர், தற்போது தேவையின்றி, இதில், குடியரசுத் தலைவரையும் இழுத்து விட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

தாய், மகள் வெட்டிபடுகொலை!

பிபின் ராவத் பற்றிய பத்து தகவல்கள்

Arivazhagan CM

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

Saravana Kumar