டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை காணலாம்…
டெல்லியில் 864 மதுக்கடைகள் இருந்த நிலையில், அவற்றில் 475 அரசுக்கு சொந்தமானவையாக இருந்தன. கடந்த 2021 நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு மது விற்பனையில் இருந்து முற்றிலும் வெளியேறி, முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த புதிய மதுபானக் கொள்ளையின் மூலம், ஒருபுறம் தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்தாலும், மறுபுறம் மதுபான விற்பனையிலிருந்து அரசுக்கு கிடைக்கும் கலால் வரி வருமானம் பெருமளவு குறைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
முன்னதாக, டெல்லி அரசு ரூ.530 மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்கு கலால் வரியாக ரூ.223.89 வசூலித்தது. ஆனால் புதிய கொள்கையில், மொத்த விற்பனை விலையின் மீதான கலால் வரியை அரசாங்கம் பாட்டிலின் விலையில் வெறும் 1% ஆகக் குறைத்தது. எனவே, மது வியாபாரிகள் ரூ.530 மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்கு ரூ.1.88 கலால் வரி மட்டுமே செலுத்தினர். அதேசமயம், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் வரியாக ரூ.30 வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, 2022 ஜூலை 8 அன்று, அப்போதைய டெல்லியின் தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதில் மனீஷ் சிசோடியா, அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான முறையில் மதுக் கொள்கையை அமல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.












