“திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட மருத்துவர்களின் உரிமையை தவெக அரசு மீட்டெடுத்துள்ளது!” – அமைச்சர் அருண்ராஜ்

திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை தவெக அரசு மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தாராளமாக தாரை வார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் ஸ்டாலின், தவறான தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை மத்திய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் மூலம் நிரப்பி வந்தது; இதனால், தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்

குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும். இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க தவெக அரசு மறுத்துவிட்டது. அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது./

நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது.

தமிழ்நாடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒரு படி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.