பாஜக எம்பியான பிரீத்தம் முண்டே டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக வளர்ச்சி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தவர் கோபிநாத் முண்டே. அவரின் மகள் பங்கஜா முண்டே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தோல்வியடைந்தார். இதனால் அடுத்து நடைபெற்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு கட்சி சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் மத்தியில் அமைச்சர் பதவியும் வழங்கப்படாததால், பங்கஜா முண்டே, பாஜக மீது நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக தேசிய செயலாளராக இருக்கும் பங்கஜா முண்டே, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ நான் பாஜகவைச் சேர்ந்தவள். ஆனால், பாஜக எனது கட்சி கிடையாது” என்று கூறியிருந்தார். இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அவரது சகோதரியும் பாஜக எம்பியுமான பிரீத்தம் முண்டேவும் பாஜகவுக்கு எதிராக முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரீத்தம் முண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு பெண் புகார் கொடுத்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை புறம் தள்ளக்கூடாது. அது எந்த அரசாகவும் இருக்கலாம். கட்சியாகவும் இருக்கலாம். மல்யுத்த வீராங்கனைகளின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஆளுங்கட்சியை சார்ந்தவளாக இருந்தாலும், மல்யுத்த வீராங்கனைகளுடனான முறையான பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள் : அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின்!! – மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் புகழாரம்
பங்கஜா முண்டே பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்த சில நாட்களிலேயே, அவரது சகோதரி பிரீத்தம் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.