கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகள் திறந்த உடன் புத்தகங்கள் மாணவர்களை சென்றடையும் வகையில் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஓசூரில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 109 பள்ளிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஏறத்தாழ 67,000 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களுக்குக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக புத்தகங்கள் மற்றும் பேக்குகள் வழங்க பள்ளி கல்விதுறை திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனவரி மாதம் முதல் மே மாதத்திற்குள் புத்தங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 281 பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் மற்றும் பேக்குகள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த புத்தகங்கள் மற்றும் பேக்குகளை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வாகனங்கள் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்களும், பேக்குகளும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு தினங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு 7 ஆம் தேதி பள்ளி திறந்த உடன் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-சௌம்யா.மோ






