அனைவருக்கும் அவரவர் படிப்பிற்கு ஏற்ற, தகுதிக்கு ஏற்ற வேலை என்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கல்வித் தொலைக்காட்சி வாயிலாக, அரசுப் பணி போட்டி தேர்வுகளுக்கு நடத்தப்படும் பயிற்சி ஒளிபரப்பினையும் தொடங்கி வைத்தார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற இம்முகாமில் 73,950 காலிப்பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடத்தப்பட்டது. இதில் உடனடியாக தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு முதற்கட்டமாக முதலமைச்சர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார். இம்முகாமில் வேலை கிடைத்தோர் தங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.