உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை நடத்திய 12வது கேடோ ஃபியஸ்டா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற தேசிய படை மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கி ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்புரையாற்றினார். அப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த இலக்கிற்கான பாதையை நாட்டின் இளைஞர்கள்தான் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், தற்போது 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நமது இளைஞர்கள் உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு, தங்க இடம், சுத்தமான தண்ணீர், சுகாதாரம், கல்வி, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தடையின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.







