முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றதாக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஜிகே உலகப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் 130க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கான விண்ணப்பங்களைப் பெற்று தகுதியான நபர்களுக்கு உடனடியாக வேலை
வாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினர். முகாமில் 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு நேர்காணல்களில் பங்கேற்றனர்.
மேலும் ராணிப்பேட்டை திமுக மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 99% வெற்றியை பெற்றுள்ளதாகக் கூறினார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்த வெற்றி கிடைத்ததாகத் தெரிவித்தார். பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளொன்றுக்கு 20 மணி நேரம் கடுமையாக உழைத்து இந்தியாவிலேயே No.1 CM என்ற இடத்தைப் பிடித்திருப்பதாகப் புகழாரம் சூட்டினார்.








