உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்ததால், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவது உறுதியாகிவிட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகிறது. இதில் குரூப்1-ல் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் குரூப்2-ல் இருந்து அரைஇறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் இறுதி கட்ட 3-வது லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
இதில் இந்திய அணி தற்போது அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக போட்டி நடப்பதற்கு முன்பே அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. ஏனெனில், நெதர்லாந்து அணிக்கும் – தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது.
இதனால், புள்ளி பட்டியலில் உள்ள இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கைமேல் வந்து அமர்ந்துள்ளது. அதேநேரத்தில், இன்று நடக்கும் பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு இடையேயான மற்றொரு போட்டியில் வெற்றி பெறும் அணியே குரூப் 2-ல் இருந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 2-வது அணியாகும். இன்று காலை தொடங்கிய போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணி மோதுகிறது. இதில், இந்திய வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் கூடுதல் புள்ளிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்









