தற்காலிகமாக ஓட்டுநர், நடத்துநர்களை பணியமர்த்தும் விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அதிகமான மக்கள் வசிக்கும் மாநகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு தொழில்களை முன்னிட்டும், பணிகளை முன்னிட்டும் ஏராளமானோர் போக்குவரத்துக்காக மாநகர பேருந்துகளை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தனியார்மய நடவடிக்கையை கண்டித்து மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இந்த திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர், நடத்துநர்களை தனியார் மூலம் நியமிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகர், மந்தைவெளி, ஆவடி உள்ளிட்ட பேருந்து பணிமனைகளுக்கு பேருந்துகள் திரும்பி வந்தவண்ணம் உள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று, அதுவும் பீக் ஹவர்ஸில் சென்னையின் முக்கிய இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பணிகள் முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் ஆட்டோக்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே ஆட்டோ, கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, கேப் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் விதிகளுக்கு உட்பட்டு கட்டணங்களை வசூலிக்குமாறு சென்னை மாநகர காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூஸ்7 தமிழுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “பொதுமக்களின் நலன் கருதி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம். பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் நிலைமை சரிசெய்யப்படும்” என்று தெரிவித்தார்.




