“நேபாளத்தில் மாயமான தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

மூன்று மாடி அளவிற்கு சேறு உள்ளதால் மீட்பு பணியில் அவர்களும் கவனத்துடன் செயல்பட வேண்டி உள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நேபாள நாட்டிலிருந்து மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்து பேசினோம். அனைவரும் உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இந்த பேரிடர் காரணமாக அனைவரும் தங்களின் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டுவிட்டனர். அத்துடன் அவர்களிடம் பயணத்திற்கான உரிய ஆவணங்களும் அவர்களிடம் தற்போது இல்லை.

எனவே முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதனை செய்து கொடுத்துள்ளோம், விரைவில் அவர்கள் அனைவரும் சென்னை வந்தடைவார்கள். தற்போது அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மனதளவில் இன்னும் மீண்டு வரவில்லை. மூன்று பேருந்துகளில் 21 பேர் பயணித்த பேருந்து இரண்டு பேருந்துக்கு மத்தியில் சிக்கிக் கொண்டது.

ஆனால் முன்னும் பின்னும் இருந்த பேருந்து முழுமையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நேரத்திலும் மன தைரியத்துடன் அனைவரும் ஒன்றாக இணைந்து முயற்சித்து வெள்ளம் பகுதியில் இருந்து வெளியேறி வேறொரு பாதுகாப்பான மேடான பகுதிக்கு சென்று அங்கு ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். 57 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்று உள்ளனர். இதில் 21 பேர் மட்டும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மற்றவர்களை தொடர்பு கொள்ளவும் அனைத்து வகையிலும் மத்திய அரசு உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் நேரடியாக சென்று மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைகள் முன்னேற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளரிடம் ஆலோசித்தோம். தற்போது மற்றொரு புதிய தகவலாக இன்னும் 120 தமிழர்கள் அங்கு மாட்டி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது அவர்களையும் மீட்டு தற்போது அழைத்து வருவதற்கான பணி நடைபெற்று, அதேபோல மற்றொரு குழு ரயிலின் மூலம் சென்றுள்ளனர், இவராக தனித்தனியே குழுக்களாக தமிழர்கள் அங்கு சென்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களையும் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல் படி சுமார் 400 தமிழர்கள் பங்கு சென்றுள்ளனர். இதில் 140 பேர் பாதுகாப்பாக ஒரு பகுதியில் உள்ளனர் 21 பேர் தற்போது பத்திரமாக அங்கிருந்து மீட்டு அழைத்து வந்துள்ளோம். இந்த நிலையில் 90க்கும் மேற்பட்ட தமிழர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்க முடியவில்லை என்றாலும், துறை ரீதியான அனைத்து தகவல்களும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறோம்.

மூன்று மாடி அளவிற்கு சேறு உள்ளதால் மீட்பு பணியில் அவர்களும் கவனத்துடன் செயல்பட வேண்டி உள்ளது.
மீட்கப்பட்ட 21 பேரினுடைய விபரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் எந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று சென்னையில் குழு அமைத்து அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு ரயில் மூலமாகவோ அல்லது கார் மூலமாகவோ என அவர்களுக்குள் வாகனங்கள் மூலம் அவர்களை அனுப்புவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசு சார்பாக நேபாள நாட்டுக்கு அதிகாரிகள் அனுப்பப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜ்மோகன்,

தற்போதைய முதல் கட்ட அவசர நிலையில் உள்நாட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இந்த நிலையில் தற்போது இணைத்து தொடர்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை தான் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. குறிப்பாக பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன பல பகுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. எனவே தற்போது பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு மீட்பதில் கவனம் செலுத்தி வரப்படுகிறது. எந்த ஒரு இயற்கை பேரிடர் ஆக இருந்தாலும் அதற்கான இரண்டாவது அலை என்பது இருக்கும் அந்த வகையில் தற்போதும் மீண்டும் ஒரு எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது எனவே அதன் பின்பு மீண்டும் மீட்பு பணி என்பது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.