266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 96 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரங்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி, ரசாயன உரங்களை ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி விவசாயிகளுக்கு தொடர்ந்து விநியோகம் செய்திட வேளாண்மை-உழவர் நலத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கல் செய்தாலோ, சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அனைத்து உரக்கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சில இடங்களில் உரங்களை அதிக விலைக்கு விற்பதாகவும், உரங்களுடன் விவசாயிகள் கேட்காத இதர பொருட்களையும் சேர்த்து விற்பதாகவும் உரங்களை பதுக்கி வைப்பதாகவும் அரசுக்கு தெரியவந்தது. உடனடியாக, கடந்த ஏப்ரல்,மே மாதங்களில் மேற்கொண்டது போல், தற்போதும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.6,949 இடங்களில் பறக்கும் படைகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களைக் கொண்டு, 374 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக 514 உர விற்பனைக்கடைகள், 6,258 கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை உர விற்பனை மையங்கள், 106 உர இருப்பு கிடங்குகள், 38 கலப்பு உர உற்பத்தி நிறுவனங்கள், 16 மாவட்ட சோதனைச் சாவடிகள், 17 தொழிற்சாலைகள் ஆக மொத்தம் 6,949 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
திடீர் ஆய்வில், 195 உரக்கடைகளில் இருப்பு தகவல் பலகையின்றி உரம் விற்பனை செய்தது, 70 உரக்கடைகளில் புத்தக இருப்புக்கும் உண்மை இருப்புக்கும் வித்தியாசம் இருந்தது, 36 கடைகளில் அனுமதி பெறாமல் உர விற்பனையில் ஈடுபட்டது, விதிமீறல்களில் கண்டறியப்பட்டது. பிறகு உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி, விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு உரக்கடைகளின் விற்பனை உரிமம் நிரந்தரமாகவும், 92 உரக்கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 266 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி, யூரியா 65,300 டன்னும், டிஏபி 42,000 டன்னும், பொட்டாஷ் 30,200 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,55,200 டன்னும் ஆக மொத்தம் 2,92,700 டன் உரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குத் தேவையான உரங்களுக்கான ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசிடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதுடன், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரங்கள் சீராக விநியோகம் செய்வதையும் அரசு கண்காணித்து வருகிறது. எனவே, அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், விதிமீறலில் ஈடுபடும் உரக்கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.







