யானைகளின் வழித்தடம் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றை கண்டறிவதற்கு சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோவை மலையடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், செங்கற்சூளைகளை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, “யானைகளின் வழித்தடம் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றை கண்டறியவும், வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சர்வதேச நிபுணர்கள், உலக வனவிலங்கு நிதியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பதிலையடுத்து ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.








