உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரஷ்யா வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்களின் அவதிகளும் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது தொடர்பான காணொலி வெளியாகியுள்ளதாகவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாத்தானுக்கும் ஆழமான நீலக்கடலுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்களின் நிலைதான், உக்ரைனில் இந்திய மாணவர்களின் நிலையாக உள்ளது என கவலை தெரிவித்துள்ள அவர், விரைவாக மீட்டு வருவதன் மூலம் தான் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நிம்மதியை ஏற்படுத்த முடியும் என கூறியுள்ளார். டெல்லியிலுள்ள உக்ரைன் தூதரை அழைத்துப் பேசி, இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பெரிய விமானங்கள், விமானப்படை விமானங்களை பயன்படுத்தி மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும் எனவும் மத்திய அரசை ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்திய மாணவர்கள் உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்கு வெளியேற பாதை ஏற்படுத்தித் தரவும், அவர்களை ரஷ்யாவிலிருந்து இந்தியா அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்








