முக்கியச் செய்திகள் உலகம்

அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? தவிக்கும் உக்ரைன்

அடுத்த 24 மணி நேரம் உக்ரைனுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தது. 5வது நாளாக போர் தொடரும் நிலையில், உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்திவருகிறது ரஷ்யா. உக்ரைனின் பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த போரில் 3,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் குறிப்பிடுகிறது. 200க்கும் மேற்பட்ட வீரர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். போரில் சிக்கி உக்ரைனில் 14 குழந்தைகள் உட்பட 352 அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளதாகவும், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் குண்டு மழைகளுக்கு நடுவே சிக்கித் தவிக்கிறது உக்ரைன். ரஷ்யாவின் படைகளை சமாளித்து, நாட்டை மீட்டெடுக்க உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். பல நாடுகளும் தற்போது உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன. அந்த வரிசையில் கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

தற்போது உக்ரைனில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள எல்லையை தாண்டியிருந்தாலும், லட்சக்கணக்கான குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஈடுகொடுக்க முடியாமால் தவித்த உக்ரைன், பெரும் போராட்டத்திற்கு பிறகு 2வது பெரிய நகரமான கார்கீவ்வை மீண்டும் பிடித்தது.

போரில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து இரு நாட்டினரும் தவித்துவரும் நிலையில், போர் முடிவுக்கு வர வேண்டும் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் போர் முடிவுக்கு வருவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரஷ்யாவின் விளாடிமிர் புதின்,  நாட்டின் அணுசக்தி தடுப்புப் படைகளை தயாராக வைக்குமாறு கூறியதும் கவனிக்கத்தகுந்தது.

உலக நாடுகளின் முக்கியத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சமீபத்தில், அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதில் அடுத்த 24 மணிநேரம் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  போர் முடிவுக்கு வருமா அல்லது தொடருமா என்பதை பேச்சுவார்த்தையே தீர்மானிக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரம் உக்ரைனுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா

Halley Karthik

ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்

Gayathri Venkatesan

பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு

Web Editor