கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போன் காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான
வழக்குகள் கான்காணித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், மாணவி பயன்படுத்திய
செல்ஃபோனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவி செல்ஃபோன் எதுவும் பயன்படுத்தவில்லை என மாணவி தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, மாணவியிடம் செல்ஃபோன் இருந்தும் அதனை மறுத்தால் அது
சட்டப்படி தவறு எனவும் அதற்காக பெற்றோரை விசாரிக்க நேரிடிலாம் எனவும்
எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி சந்திரசேகரன் முன் பெற்றோர்
தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி முறையீடு ஒன்றை செய்தார். அப்போது
மாணவியின் செல்ஃபோனை காவல்துறையிடம் தாங்கள் ஒப்படைக்க மாட்டோம் எனவும், அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் சந்தோஷ், செல்ஃபோனை பெற்றுக்கொள்ள
மறுத்ததோடு, செல்ஃபோனை புலன் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கை புலன் விசாரணை செய்து வரும்
காவல்துறையிடம் செல்ஃபோனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும் என கூறிய நீதிபதி, பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதையடுத்து தாமதிக்காமல் செல்ஃபோனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.








