பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகர் குதியை சேர்ந்தவர் ராகவி. இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். ராகவி, மாணவ, மாணவிகளிடம் சகஜமாக பழகும் போக்குடையவர். மேலும் அணியும் உடைகளில் தனித்துவத்தை கடைபிடிப்பவராக இருந்து வந்திருக்கிறார். இதனால், ராகவியின் பழக்கவழக்கங்கள் தொடர்ச்சியாக ஆசிரியர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவி ராகவி தன் தலைமுடிக்கு கலரிங் செய்து கொண்டு பல்கலைகழகத்திற்கு சென்றிருக்கிறார். இதனை வகுப்பு ஆசியரியர், மற்றும் பல்கலைகழக நிர்வாகமும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகவி வகுப்புகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து தனது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது மகளின் அறையை திறந்து பார்த்த பெற்றார்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். மேலும் மகள் எதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதை அறியாமல் குழப்பத்தில் தவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் மாணவி ராகவியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பினர். மேலும், மாணவி உயிரிழப்பு
விவகாரம் குறித்து உண்மை கண்டறிய பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
தற்போது இந்த விசாரணையில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவி ராகவியை பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடர்ச்சியாக அவரது உடை மற்றும் பிற மாணவர்களுடன் பழகும் விதம் அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக மனம் துன்புறும் வகையில் பேசி வந்ததாகவும், குறிப்பாக மாணவி பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர்கள் அது போன்று நடந்து கொண்டனர் என்று தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் மாணவியின் மரணத்திற்கு பேராசிரியர்கள் முரண்பட்ட வகையில் காரணங்கள் கூறுவதாகும் உண்மை கண்டறியும் குழுவினர் கூறியது மாணவியின் பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மாணவியின்உயிரிழப்புக்கு தனியார் பல்கலைக்கழக நிர்வாகமே காரணம் என்பதால் மாணவி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த மாணவி பட்டியல் வகுப்பை சார்ந்தவர் என்பதால் இந்த வழக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின் படி ,மாணவி ராகவி உயிரை மாய்த்துக் கொண்ட பின்னணியில் பல்கலைகழக நிர்வாகமே இருந்திருக்கிறது என்ற தகவல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.








