பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது

பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில்…

பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இந்த நிலையில் 29 பக்க தீர்ப்பு நகல் தற்போது வெளியாகியுள்ளது. விரிவாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில்,

“ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 161 என்பது இருந்தாலும், அவர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் தான். பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் கால தாமதம் செய்து எந்த அரசியலமைப்பு ஆதாரமும் இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

பிரிவு 161 இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதில் காரணமில்லா கால தாமதம் செய்யும்போது, அது நீதித்துறையின் ஆய்வுக்கு உட்பட்டது. குறிப்பாக ஒரு கைதியை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரைகளின் மீது ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தால் அது நீதித்துறை ஆய்வுக்குள் வரும்.

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் கால தாமதம் செய்து எந்த அரசியலமைப்பு முகாந்திரமும் இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

ஆளுநர் என்பவர் யார் என சுருக்கமாக கூறினால் அவர் மாநில அரசை பிரதிபலிப்பவரே.  மேலும் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் மீது இரண்டரை ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, பேரறிவாளனுடைய நீண்ட நாள் சிறைவாசம், சிறையில் அவரது நன்னடத்தை, பரோலின்போது அவரது நன்னடத்தை, அவரது உடல்நிலை, அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய், சிறை காலத்தில் அவர் பெற்ற கல்வித் தகுதிகள் மற்றும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக் கூடிய அவரது விடுதலை தொடர்பான மனு, இரண்டரை ஆண்டுகளாக விடுதலை தொடர்பான அமைச்சரை பரிந்துரையை காரணமின்றி கிடப்பில் போட்டது என்பதை கருத்தில் கொண்டு

மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநரின் பரிசீலனைக்கு மாற்றுவது பொருத்தமாக இருக்காது என்பதால் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது.

மேலும் தற்போதைய நிலையில் இத்தனை ஆண்டுகள் பேரறிவாளன் சிறையில் இருந்ததை முழுமையான தண்டனை அனுபவித்ததாக கருதி தற்போது ஜாமினில் உள்ள பேரறிவாளனை விடுவித்து உத்தரவிடுகிறோம். மேலும் அவரது ஜாமீன் சம்பந்தமாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களும் அனைத்தும் முடித்து வைக்கப்படுகிறது.

அதேபோல, இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்த சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இது பொதுப்பட்டியலில் பிரிவு 3ல் உள்ளதால் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.