பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தாமதமானது ஏன்?

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையிலெல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை பார்க்கலாம். கடந்த 1991ஆம் ஆண்டு மே…

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையிலெல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

கடந்த 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில், 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 வயதான பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கடந்த 1998 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, 1999ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது.

கடந்த 2014 பிப்ரவரி மாதம் பேரறிவாளன் மற்றும் பிற மூன்று பேர்கள் அனுப்பி வைத்த கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தியதை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதையடுத்து, 1999ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1999 அக்டோபர் 17ம் தேதி தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார். 2000ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுநர் நிராகரித்தார். தொடர்ந்து, 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார். 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பேரறிவாளனின் கருணை மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

அதேசமயம், கருணை மனுவை குடியரசு தலைவர் தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பதிவு செய்தார்.
இந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு 2014ல் விசாரித்தது.

கருணை மனு மீது முடிவெடுக்க 11 ஆண்டு தாமதமானதை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதிகள், தூக்குத் தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தூக்குத் தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

மேலும், இந்த வழக்கு மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது; இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. எழுவரையும் விடுவிக்க கோரி தமிழ்நாட்டின் பலவேறு பகுதிகளில் போராட்டம் வலுத்தது. செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த பின்னணியில், எழுவர் விடுதலை விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதமாக உருவெடுத்தது. இதனையடுத்து தான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில், எழுவரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால், 2018 ஏப்ரல் மாதம் தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது.

நீதி தாமதிக்கப்படுவதால் 142 -வது சட்ட விதியை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அயோத்தி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முஸ்லிம்களுக்கு மசூதி அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை வழங்க, 142-வது விதியை பயன்படுத்தியே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைக்கவுள்ள அறக்கட்டளையில் நிர்மோஹி அகாடாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் 142-வது விதிக்கு உட்பட்டே நீதிபதிகள் பிறப்பித்தனர். அதே விதியைப் பயன்படுத்தி தான், நீதி தாமதிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி பேரறிவாளனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாகேஸ்வரராவ் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.