முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது, ஒரு மாணவியின் மரணத்தை கூட அரசியலாக்கி – தன் உள்கட்சி மோதலை திசைதிருப்பும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மாணவி மரணத்தைப் பொறுத்தமட்டில் அச்செய்தி வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளரும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி – போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டிருந்தது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த வேளையில், பெற்றோர் தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி வழக்கு தொடர்ந்து – அந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறவிருக்கிறது.

 

இதற்கிடையில் பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி – மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளார். ஆனால் தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி இதனை மறந்து விட்டு – எந்தப் பதவியில் நாம் இருக்கிறோம் என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் அவர் திமுக அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

 

இதற்கிடையில் இன்றைய தினம் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் – வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்டு வந்த சில விஷமிகள் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அறிந்தவுடன் மருத்துவமனையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மக்கள் அமைதி காக்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநரையும், உள்துறைச் செயலாளரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வன்முறையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது அங்கே அமைதியை நிலை நாட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது காவல்துறை நிர்வாகம் எப்படியிருந்தது என்றால் – ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்று – பல நாட்கள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசே தோல்வியடைந்து ஸ்தம்பித்து நின்றது. சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடி மரணத்தில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டையே வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட சூழல் உருவாகி – தன் கீழ் இருந்த காவல்நிலையத்தின் நிர்வாகத்தையே கோட்டை விட்டார் பழனிசாமி.

 

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள் – தூண்டி விட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரு ஊரே வெள்ளை உடை அணியும் அதிசயம் – காரணம் தெரியுமா?

EZHILARASAN D

வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்

Web Editor

வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியரிடம் காவல்துறையினர் விசாரனை!

Halley Karthik