சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

சென்னை மாநகராட்சியில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்லப்பிராணி உரிமையாளர்கள் பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள், புகார்கள் அதிகமாக பெறப்பட்டு வருகின்றன.

இவற்றில் பெருமளவு சம்பவங்களில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன நாய்களின் ஆக்ரோஷமான குணநலன்களால் அதிகளவு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்களான பிட்புல் மற்றும் ராட் வீலர் நாய் இனங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதிகளில் வளர்ப்பதற்கு தடை விதிக்க மன்ற கூடத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு தடை விதிக்கவும் மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் போது அவற்றிற்கு கழுத்துப்பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவிப்பதை கட்டாயம் ஆக்கவும், இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிமமின்றி சட்ட விரோதமாக பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1,00,000 அபராதம் விதிக்கவும் மன்றக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.