தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக நேற்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வாயிலில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்கள் பணிபுரியும் மருத்துவமனையின் வாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கன்னியாகுமரி, கடலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.