சென்னையில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்தரை செயலாளர் ராதாகிருஷ்ணன் , பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் சென்னை அம்மா மாளிகளையில் ஆலோசனையில் மேற்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிவுகள் சில எடுத்துள்ளோம். மண்டல வாரியாக கொரோனா கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை திருவள்ளுவர், காஞ்சிபுரம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையும் கடிதம் அனுப்பி உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முகக்கவசம் எளிமையான வழிமுறை அல்ல, வலிமையான வழிமுறை. கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்றம் வரும், அதற்கு பதட்டப்பட வேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், 1.15 லட்சம் படுக்கைகள் தமிழகம் முழுவதும் தயாராக உள்ளது. சென்னையில் 10 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, “நாளை காலை முதல் ஒவ்வொரு மணடத்திற்கும் 3 குழுக்கள் பொது இடங்களை கண்காணிக்க உள்ளோம்.
விதிகளை மீறி கூட்டம் கூட்டினால் அபராதம் விதிக்கப்படும். கல்யாண மண்டபம், ஹோட்டல் மற்றும் இதர பொது இடங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “எந்த நிகழ்வு நடத்தினாலும் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும்.” என்றும் கூறினார்.
இந்நிலையில், “சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தாமதப்படுத்தினால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.” என ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








