“டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

‘டிஜிட்டல் கொள்ளை’ போன்ற இரக்கமற்ற இணையவழி மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ மற்றும் இணையவழி பணப்பறிப்பு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜய்மால்யா பக்‌ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதியவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் வாழ்நாள் சேமிப்பைக் குறிவைத்து நடத்தப்படும் இந்தக் குற்றங்களை ‘டிஜிட்டல் கொள்ளை’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதில் ஈடுபடும் இரக்கமற்ற குற்றவாளிகளை விட்டுவைக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்த பின்னர் மீண்டும் அதே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்வோம் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 81 வயது முதியவர் ஒருவரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து 1.90 கோடி ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஏமாற்றப்பட்ட முதியவர்களை வழக்கு விசாரணைக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு அலைய வைக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

எனவே, குற்றம் எங்கு நடந்ததோ அங்குதான் வழக்குத் தொடர முடியும் என்றும், நாடு முழுவதும் உள்ள தனித்தனி வழக்குகளை ஒன்றிணைக்கக் கோருவதை ஏற்க முடியாது என்றும் கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.