“டிஜிட்டல் அரெஸ்ட் : வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் செயல்பட வேண்டும்” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் இணைய மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வங்கிகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வங்கிகள் “பாதுகாப்புக் குடையாக” செயல்பட வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், வங்கிகளின் கவனக்குறைவால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால், அந்த இழப்பை வங்கிகளே முழுமையாக ஈடுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனப்படும் ஆன்லைன் பணப்பறிப்புச் சம்பவங்கள் குறித்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மல்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் பாதுகாப்புக் குடையாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், வங்கிகளின் கவனக்குறைவால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால், அந்த இழப்பை வங்கிகளே முழுமையாக ஈடுசெய்ய வேண்டும் எனக் கண்டிப்புடன் தெரிவித்தனர். முதியவர்கள் அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் திடீரென வழக்கத்திற்கு மாறாகப் பெரிய தொகையை ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பரிவர்த்தனை செய்ய முயன்றால், வங்கிகள் அதை உடனடியாகத் தடுத்துச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கே.ஒய்.சி திருத்தங்கள் டிசம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்கள் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்

இதையடுத்து, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சந்தேகத்திற்குரிய நீண்ட நேர அழைப்புகளுக்கு எச்சரிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் புதிய கே.ஒய்.சி திருத்தங்கள் டிசம்பர் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் சைபர் குற்றங்கள் குறித்த விவரங்களை மத்தியக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.