இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை.
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 26 இடங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை ஆதரிக்கும் வலதுசாரிக் கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும்பான்மையை இழந்துள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு சுமார் 67 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த அணியில் உள்ள கட்சிகளிடையே கொள்கை வேறுபாடுகள் நிலவுவதால், அவற்றால் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரபுக் கட்சிகளின் ஆதரவு முக்கியம்
எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் தலைமையிலான யூத எதிர்க்கட்சிகளுக்கு மொத்தம் 48 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்களைப் பெற, ராம் மற்றும் கூட்டுப் பட்டியல் (Joint List) ஆகிய அரபுக் கட்சிகளின் ஆதரவு அவசியமாகியுள்ளது. இந்த இரு கட்சிகளும் இணைந்து 19 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் அரபு குடிமக்களிடையே இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அரபு சமூகத்தில் அதிகரித்த குற்றச்சம்பவங்கள், காவல்துறையின் அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள், இனவெறி மற்றும் காசா போர் தொடர்பான அதிருப்தி ஆகியவை வாக்குப்பதிவு அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகின்றன.
அரபுக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு இடதுசாரி ஜனநாயகக் கட்சித் தலைவர் யாயிர் கோலன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், ஐசன்கோட்டின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நப்தாலி பென்னட், அவிக்டர் லிபர்மேன் உள்ளிட்ட வலதுசாரித் தலைவர்கள், அரபுக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவுகட்ட அரசியல் ஒத்துழைப்புக்கு தயாராக இருப்பதாக கூட்டுப் பட்டியல் கட்சி தெரிவித்துள்ளது.
ஆட்சியைத் தக்கவைக்க நெதன்யாகு முயற்சி
தேர்தல் முடிவுகள் தனக்குச் சாதகமாக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளும் அரபுக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதைத் தடுக்க நெதன்யாகு முயற்சிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரபுக் கட்சிகள் தேர்தலில் முறைகேடுகள் மூலம் வெற்றி பெற முயன்றதாக லிகுட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது. எனினும், தேர்தல் நாளில் பல்வேறு கட்சிகள் அளித்த ஆயிரக்கணக்கான புகார்களை ஏற்கெனவே தேர்தல் குழு நிராகரித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராணுவ வீரர்கள், கைதிகள், மருத்துவமனைகளில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் இரட்டை உறையிலான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இத்தகைய வாக்குகள் 4.30 லட்சம் முதல் 4.80 லட்சம் வரை இருக்கலாம் எனத் தேர்தல் குழு மதிப்பிட்டுள்ளது. இந்த வாக்குகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களின் முடிவுகளை மாற்றக்கூடும் என்பதால், இறுதி முடிவுகள் வியாழக்கிழமை நவ.4 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெறும். தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுடன் ஆலோசித்து, 61 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அதிக வாய்ப்புள்ள தலைவரை அவர் ஆட்சி அமைக்க அழைப்பார். அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆட்சி அமைக்க அழைக்கப்படும் தலைவருக்கு கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம். அந்தக் காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், மற்றொரு தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவராலும் முடியாத பட்சத்தில், புதிய தேர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம்.
ஐக்கிய அரசுக்கு வாய்ப்பு?
ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி சபாநாயகர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை மாற்றவும், சில சட்டங்களை முன்னெடுக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், நெதன்யாகுவின் கூட்டணி உறுதியாக இருப்பதாகக் கருதப்படும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்குள் நிலவும் கொள்கை வேறுபாடுகள் அவர்களுக்குப் பின்னடைவாக அமையலாம்.
இந்த அரசியல் முட்டுக்கட்டையைத் தீர்க்க, நெதன்யாகுவும் ஐசன்கோட்டும் இணைந்து தேசிய ஐக்கிய அரசை அமைக்க அதிபர் ஹெர்சாக் முயற்சி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் நடைபெறுவதைத் தவிர்க்க அனைத்துக் கட்சித் தலைவர்களும் திறந்த மனதுடன் ஆலோசனையில் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால், தேர்தலில் நெதன்யாகு பெரும்பான்மையை இழந்திருந்தாலும், அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகுவது இன்னும் உறுதியாகவில்லை. அடுத்தகட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளே இஸ்ரேலின் ஆட்சி யாருடைய கைகளுக்குச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும்.




