முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை

படிப்பும் பகுத்தறிவும் ஒருசேர ஒரு மனிதனிடம் இருக்கும்போது தான், அவன் உலகறிய உயர்ந்து நிற்கிறான் என்பதற்கு இக்கால இளைஞர்களுக்கு இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு – திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை

படித்தால் மட்டுமே இந்த சமுதாயம் ஒரு மனிதரை மதிக்கும் என்பதை பல இடங்களில் நாம் கேட்டதுண்டு. படிப்போடு பகுத்தறிவும் இணைந்த அறிவாற்றல் தான் ஒரு மனிதரை சிறந்த வழிகாட்டியாக மாற்றும் என்று சமீபத்தில் மேடை ஒன்றில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்படி, கல்வியறிவுடன் கூடிய பகுத்தறிவு பாதையில், தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையினரின் வழிகாட்டியாய், நூற்றாண்டுக்கும் முன்னரே ஒரு தமிழர் வாழ்ந்துகாட்டியுள்ளார். 1930ம் ஆண்டு, இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த காலம் அது. அப்போது, நாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கு ஏற்படும் பல்வேறு சாதி ரீதியான இன்னல்கள் குறித்து விவாதிக்க, பட்டியலினத்தவருக்கான வட்டமேசை மாநாடு இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஏ.ராமசாமி முதலியார், ஆகியோரோடு பட்டியலினத்தோர் சார்பாக டாக்டர்.அம்பேத்கர் உட்பட சிலருடன் திவான் பகதூரும் பங்கேற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோட் சூட், முறுக்கு மீசை, நிமிர்ந்த நடை என கம்பீரமாக தோற்றமளித்தார் திவான் பகதூர். அந்த மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளுக்கு விருந்தளித்தார் பிரிட்டன் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ். ஒவ்வொரு பிரதிநியுடனும் கைகுலுக்கி வரவேற்றார் மன்னர், திவான் பகதூரிடம் கையை கொடுத்தபோது, அவர் கைகுலுக்காமல் இழுத்துக்கொண்டார். இதனை கண்டு திகைத்துப்போன மன்னர், ”ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என கேட்டதற்கு, திவான் பகதூர் அளித்த பதில் மன்னரை அதிர வைத்தது. “எங்கள் நாட்டில் நான் ஒரு தீண்டத்தகாதவன். என்னை நீங்கள் தீண்டக்கூடாது. நான் பறையன். இந்தியாவில் தீண்டப்படாத ஒரு சமுதாயத்திலிருந்து வந்தவன்” என்றார். சொந்த நாட்டிலே, சொந்த மக்களாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எப்படி சாதியை வைத்து ஒரு சமூகம் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறது என்பதை, சில வரி பதிலின் மூலமே, பிரிட்டன் மன்னருக்கு புரிய வைத்தார்.

யார் இவர் என ஆர்வம் கொண்ட மன்னர், அந்த திவான் பகதூர் அணிந்திருந்த கோட்டில் உள்ள பெயரை படித்தார். ’ராவ் சாகிப் இரட்டைமலை சீனிவாசன், பறையன், தீண்டப்படாதவன்’ என பொறிக்கப்பட்டிருந்தது. படிப்பால் உயர்ந்து, பகுத்தறிவால் நிமிர்ந்து, சாதிய ஒடுக்குமுறைகளை உடைத்தெரிய தனது புரட்சி குணத்தால் ஓங்கி உயர்ந்து நின்றவர் தான் இந்த இரட்டைமலை சீனிவாசன்.

தனது பெயருக்கு பின்னால் ’பறையன்’ என போட்டுக்கொண்டதால் அவர் அதை பெருமையாக கருதுவதாய் அர்த்தமல்ல. எந்த பெயரை வைத்து பறையன் தாழ்ந்தவன் என ஆதிக்க சமூகத்தினர் ஒடுக்கினார்களோ, அதே பெயரை வைத்தே உயர்ந்து காட்ட வேண்டும், பெயரின் தவறான பொருளை பெருமைக்கு உரியதாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய செயலை செய்தார் இரட்டைமலை சீனிவாசன். சாதியின் பெயரால் இந்தியர்களை இந்தியர்களே ஒடுக்குவதை புரிந்து கொண்ட பிரிட்டன் மன்னர், “உங்கள் சமூகத்தினரின் ஒருவர் கீழே விழுந்தாலும், அவர் தீண்டத்தகாதவர் எனக்கூறி கை கொடுக்கவும் தயங்குவார்களா?” என வினவினார். “ஆம், பல நூறு ஆண்டுகளாய் இப்படிதான் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம். உங்கள் ஆட்சியிலும் இது தொடர்கிறது.” என்று பதிலளித்த இரட்டைமலை சீனிவாசன், வட்டமேசை மாநாட்டில் பேசுகையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான பல்வேறு உரிமைகள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தார்.

”தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டால் தான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” என இந்தியாவில் ஒடுக்கப்படுபவர்களுக்காக பிரிட்டனில் தனது குரலை எழுப்பினார். ஆடையில் பொறிக்கப்பட்ட பறையன் என்ற பெயரில் தொடங்கி அறிஞர்களை கொண்ட வட்டமேசை மாநாடு வரை செல்லுமிடமில்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை மட்டுமே அவர் முழு மூச்சாய் முழங்க காரணம், அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திலேயே பிறந்து, பல ஒடுக்குமுறைகளையும், இன்னல்களையும் அவர் கடந்து வந்தவர் என்பதுதான்.

1859 ஜூலை 7ம் தேதி, அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தின் கோழியாளத்தில், இரட்டைமலை, ஆதி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சீனிவாசன். வெளிப்படையாகவே சாதிய கொடுமைகள் நிகழ்ந்த காலக்கட்டம் அது. பிறந்த ஊரில் சிறு வயதிலிருந்தே சீனிவாசனது குடும்பம் பல்வேறு சாதிய கொடுமைகளோடு பஞ்சத்திற்கும் ஆளானதால், தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்தது. ஆனால், அங்கேயும் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு சமூக கொடுமைகளுக்கு ஆளாகினர் அவரது பெற்றோர்.

திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்ததும், பல்வேறு காரணங்களால் படிப்பை விட்டுவிடுவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் சீனிவாசன். ஆனால், படித்தால் மட்டுமே தனது சமூகத்தினருக்கு மதிப்பும், வேலையும் கிடைக்கும் என்றுணர்ந்த சீனிவாசன் எப்படியேனும் படிப்பை தொடர்வது என்று முடிவு செய்தார். தஞ்சை உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து, பள்ளியின் இறுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். அந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் பள்ளி படிப்பை முடிப்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், இரட்டைமலை சீனிவாசன் அதோடு நிறுத்திவிடுவதாய் இல்லை. கோயம்பத்தூர் அரசுக் கலை கல்லூரியில் இளங்கலை படிப்பையும் தொடர்ந்தார். தனது கல்லூரியில் உள்ள 400 பேரில் இரட்டமைலை சீனிவாசன் உட்பட 10 பேரை தவிர, இதர அனைத்து மாணவர்களும் ஆதிக்க சமூகத்தினர் தான். மிகவும் சிரமத்துக்கு இடையே படிப்பை தொடர்ந்த சீனிவாசன், கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.

தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் பட்டியலின பட்டதாரி என்றும், தேசிய அளவில் பட்டம் பெற்ற முதல் பட்டியலின பட்டதாரி என்ற பெருமையும் இரட்டைமலை சீனிவாசனுக்கு உண்டு. பட்டதாரி என்பதால், 1880களின் ஆரம்பத்தில், நீலகிரியில் ஆங்கிலேயருக்கு சொந்தமான ஐரோப்பிய நிறுவனத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். 1888ம் ஆண்டு ரெங்கநாயகி என்பவரை திருமணமும் செய்து கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தபோது, இரட்டைமலை சீனிவாசனுக்கு theosophical societyயை சேர்ந்த madam helena blavatsky, colonel henry steel olcott ஆகியோருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கெனவே, அங்கிருந்த தனது உறவினர் அயோத்திதாசப் பண்டிதருடன் இணைந்தும், தனித்தும் இரட்டை மலை சீனிவாசன் அந்த மூவருடன்அரசியல் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார்.

ஒடுக்கப்பட்டோர் வரலாற்றின் இருபெரும் ஆளுமைகளான அயோத்திதாச பண்டிதருக்கும், இரட்டைமலை சீனிவாசனுக்கும் அரசியல் பயிலகமாகவே அப்போது நீலகிரி விளங்கியது. தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் எந்த சாதியின் பெயரை வைத்து, தன்னை இழிவுபடுத்துகிறார்களோ, அதே அடையாளத்தில் மீண்டெழுவது என்ற உறுதியோடு இருந்த இரட்டைமலை சீனிவாசன், 1891ல் ’பறையர் மகாஜன சபையை’ தொடங்கினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் தரப்பிலான கோரிக்கை, விண்ணப்பம், தலையீடு, கூட்டம், தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார். இதே காலகட்டத்தில்தான் 1891ல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டி, 10 தீர்மானங்கள் நிறைவேற்றி, ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். பின்னர், ‘பறையர் மகாஜன சபையை’ 1892ல் ஆதிதிராவிட மகாஜன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார் இரட்டைமலை சீனிவாசன்.

இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் இருந்த தடைகள், நீக்கப்பட்ட பின்னர், சுயமாய்ப் பத்திரிகைகள் தொடங்கும் முயற்சிகள் எழுந்தன. அப்போது ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் தங்களது குரலை உலகரிய செய்ய, பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை அந்த வரிசையில் வந்த முன்னோடி இதழ்களாகும். 1893ம் ஆண்டு, ‘பறையன்’ எனும் இதழை தொடங்கினார் இரட்டைமலை சீனிவாசன். முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும், 1900ம் ஆண்டு வரை இரட்டைமலை சீனிவாசனின் பறையன் இதழ் வெளியானது. மூலைமுடுக்கில் இருக்கும் குக்கிராமங்களில் நடைபெற்ற சாதிரீதியான ஒடுக்குமுறை பிரச்சினைகள் கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கும் அனுப்பப்பட்டன. இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிய பறையன் இதழ் பெரும் பங்காற்றியது. 1894ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, அப்போதைய கிருஷ்ணா மாவட்டத்தில் பஞ்சமர்களுக்காக நில உரிமைப் போராட்டத்தை நடத்தினார். இதன் எதிரொலியாக ஆங்கிலேய அரசு தாழ்த்தப்பட்டோரின் உரிமையான பஞ்சமி நிலத்தை வழங்கியது. நிலமற்றவர்களாய் கருதப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கபட்டதில் முக்கிய பங்கு இரட்டைமலை சீனிவாசனுக்கு உண்டு.

இந்திய குடிமை பணியாளர் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கிலேயர் அரசாங்கம் முடிவு செய்தபோது, அதனை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட தேசிய தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பான விண்ணப்பமும், சில நூறு கையொப்பங்களோடு ஆங்கிலேய அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியர்களை அரசு பணிக்கு தேர்வு செய்ய நடத்தப்படும் ஐசிஎஸ் தேர்வை இந்தியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்த இரட்டைமலை சீனிவாசன், அதற்காக மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் படித்து, அரசு வேலைக்கு செல்ல வேண்டும், அதிகாரம் பெற வேண்டும் என்று பேசும் இரட்டைமலை சீனிவாசன், அதற்கான தேர்வை இந்தியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐசிஎஸ் தேர்வை இரட்டைமலை சீனிவாசன் எதிர்க்க ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்தியாவில் இந்த தேர்வை நடத்தினால், அதில் பங்குபெறும் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாய்ப்பை பறிக்க, பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று இரட்டைமலை சீனிவாசன் குரல் எழுப்பினார். இதற்காக 1893ம் ஆண்டு டிசம்பர் மாதம், வெஸ்லியன் மிஷனரி அரங்கில் ஒரு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். பின், 1894ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னியிடம் எதிர் மனு அளிக்கப்பட்டது. ஒரு தேர்வுக்காக, இத்தனை ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெற்று, இந்த எதிர்ப்பை பெரும் புரட்சி போராட்டமாக இரட்டைமலை சீனிவாசன் மாற்ற, அப்போது பெரும் ஆபத்தாய் தலைவிரித்தாடிய சாதிய ஏற்றத்தாழ்வும், தீண்டாமையுமே காரணம். இந்த தீண்டாமை பள்ளிகளில் சிறு குழந்தைகள் அளவிலும் தொடர்ந்தது.

1898 அக்டோபர் 21ம் தேதி, பல பள்ளிகளில் நலிவுற்ற வகுப்பினரின் குழந்தைகள் ஏன் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதை விளக்கி ஆங்கிலேய அரசிடம் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட அரசு, சென்னை மாநாகராட்சி பள்ளிகளை நிறுவ வேண்டும் என உத்தரவு பிறபித்தது. ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரத் தேவைக்காக இந்தியாவை விட்டு வெளியேறி, தென்னாப்பிரிக்கா சென்றார் இரட்டைமலை சீனிவாசன். இந்திய வம்சாவழி தொழிலாளர்கள் மிகுதியாக வாழ்ந்த, நட்டால் நகரில் வசித்த இரட்டைமலை சீனிவாசன், அங்குள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய காந்தியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1902ல் கிழக்கு ஆப்பிரிக்காவின் லான்ஸிபாரில் காந்தியின் பேச்சை கேட்கும் வாய்ப்பு இரட்டைமலை சீனிவாசனுக்கு கிடைத்தது.

ஆனால், 1906ல் தென்னாப்பிரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரில் தான், காந்தியை அவர் சந்திக்க நேர்ந்தது. காந்தி தனது கையொப்பத்தை மோ.க.காந்தி என தமிழில் எழுத கற்று கொடுத்ததும் இரட்டைமலை சீனிவாசன் தான். 1930களில் ஹரிஜன சேவா சங்கத்தை காந்தி தொடங்கிச் செயல்பட்டு வந்தபோது, அவரோடு தாழ்த்தப்பட்டோரின் மேம்பாடு சார்ந்த பல உரையாடல்களை மேற்கொண்டார் இரட்டைமலை சீனிவாசன். லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கொண்டு வந்த தனித் தொகுதி முறை, இரட்டை வாக்குரிமை ஆகியவற்றை காந்தி கடுமையாக எதிர்த்தார். பூனா ஒப்பந்தம் என்றழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அந்தத் தருணத்தில் மற்றொரு தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி.ராஜா, காந்தியின் பக்கம் நின்றபோது, இரட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருக்கு ஆதரவாக நின்றார்.

உண்ணாவிரதத்தின் போது காந்தியை மூன்று முறை சிறையில் சந்தித்தார். அதில் ஒருமுறை அம்பேத்கருடன் சென்றும் சந்தித்து உரையாடினார். 1923 முதல் 1939 வரையான காலகட்டத்தில், சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக இருந்தார் இரட்டைமலை சீனிவாசன். இரட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகக் காரணம், 1919ம் ஆண்டு சட்டம் தான். இச்சட்டத்தின் படி, இந்தியாவிலேயே முதன்முறையாக பட்டியலின வகுப்பினருக்கான வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டது. இதற்கு முன், இந்தியாவில் பட்டியலின வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. எனவே, 1920 முதல் மாகாண சட்டமன்றங்களுக்கு பட்டியலின வகுப்பினரின் பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக, நாட்டிலேயே மெட்ராஸ் மாகாணத்தில் தான் அதிகபட்சமாக 10 இடங்கள் பட்டியலின வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த சட்டம் கொண்டுவரப்பட, இரட்டைமலை சீனிவாசன் உட்பட பல புரட்சியாளர்கள் நடத்திய போராட்டமே காரணம்.

காந்தி மட்டுமல்லாது அம்பேத்கருடனும் நெருங்கிய நட்பு பாராட்டினார் இரட்டைமலை சீனிவாசன். 1930 நவம்பர் மாதம், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் இருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கு உண்டான தகுதிநிலையை விரிவுபடுத்துவதை ஆதரித்தனர். அத்தகைய நடவடிக்கை மட்டுமே அவர்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் என இருவரும் தீர்க்கமாய் நம்பினர். முதலாம் வட்டமேசை மாநாட்டு முடிந்த தருணம், அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் தங்களின் இறுதிக் கோரிக்கையாக ஒடுக்கப்பட்டோரின் பெயர் மாற்றம் பெற வேண்டுமெனக் கூறினர். தங்களைச் “சாதி இந்து அல்லாதோர்”, “இந்து எதிர்ப்பாளர்கள்”, “இந்து மத வழிபாட்டு எதிர்ப்பாளர்கள்” என்றே அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 1930, 1931 என அம்பேத்கர் பங்குபெற்ற இரு வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டு, பறையர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

1932 வட்டமேசை மாநாடு குறித்தும், communal award ஒதுக்கீடு குறித்தும் அம்பேத்கர் பேசியபோது, ”communal award அனைவருக்கும் எல்லாமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சார்பாக வட்டமேசை மாநாட்டில் நானும் எனது சக ஊழியர் ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் முன்வைத்த பரிந்துரைகளில், சில மாறுபாடுகளுக்கு நானே தயாராக இருந்தேன்.” என்றும் குறிப்பிட்டார். ”நானும் அம்பேத்கரும் நகமும் சதையுமாய் பணியாற்றினோம்” என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வட்டமேசை மாநாடுகளில் இருவரும் குரல் கொடுத்ததை நினைவுட்டினார் இரட்டைமலை சீனிவாசன். காந்தி, அம்பேத்கர், அயோத்தி தாசர் என பெரும் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகவே இருந்தார் இரட்டைமலை சீனிவாசன்.

தீண்டாமை ஒழிப்பு, சாதிப் பாகுபாடு, ஆலய நுழைவு, நில உரிமை, இட ஒதுக்கீடு, கல்விக்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு புரட்சி போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினார் இரட்டைமலை சீனிவாசன். மண் சுமந்து கோயிலைக் கட்டும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், கோயிலுக்குள் செல்ல தடைவிதிப்பது கொடுமையல்லவா? கோயில் கட்ட உதவாத ஆதிக்க சாதியினர், வருமானம் பெற அனைத்துக் கோயில்களையும் கைப்பற்றிக் கொண்டது கண்டனத்துக்குரியதல்லவா? என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்த இரட்டைமலை சீனிவாசன், மற்ற சாதியினரை போல் ஒடுக்கப்பட்ட மக்களும் கோவில்களுக்கு செல்ல உரிமை வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார். அரசு விடுமுறை தினங்களில் மதுக்கடை மூடல், பரம்பரை மணியக்காரர் முறை, ஆலய நுழைவு, தொழுவத்தில் குற்றவாளிகள் கட்டும் முறை ஒழிப்பு, படிப்பறிவில்லாதவர்களிடம் கைரேகைகள் பெறும் முறையில் மாற்றம் போன்ற சமூக சீர்த்திருத்தச் சட்டங்களிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். இரட்டைமலை சீனிவாசன் முன்வைத்த பொதுவெளி பிரவேசத் தீர்மானமும், ஆலய நுழைவுத் தீர்மானமும் தான் பாலக்காடு கல்பாத்தி அக்ரஹார நுழைவுக்கும், பெரியார் பங்குபெற்ற வைக்கம் கோயில் நுழைவுக்கும் முன்னோடியாக அமைந்தன.

சென்னை மைலாப்பூரில் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மக்கள் மீதான அக்கரைக்காவும், சேவைக்காகவும், போராட்ட குணத்திற்காகவும் இரட்டைமலை சீனிவாசன் பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்றார். 1926ல் ராவ் சாஹிப், 1930ல் ராவ் பஹதூர், 1936ல் திவான் பஹதூர் உள்ளிட்ட உயரிய பட்டங்களை இவருக்கு வழங்கி ஆங்கிலேயர் அரசு கெளரவித்தது. 1940ல் திரு.வி.கவின் முன்னிலையில், ராஜாஜியின் தலைமையில் ’திராவிட மணி’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உரிமைக்கு குரல் கொடுக்க வைத்த இரட்டமலை சீனிவாசன், 1945 செப்டம்பர் 18ம் தேதி இயற்கை எய்தினார். இரட்டைமலை சீனிவாசனின் போராட்டத்தின், முற்போக்கு சித்தாந்தத்தின் எதிரொலி, அவரது பேரனின் மூலமும், முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மூலமும் எதிரொலித்தது. 1954ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பாலசுப்பிரமணியன் பரமேஸ்வரன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பரமேஸ்வரனையே நியமித்தார் காமராஜர். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பரமேஸ்வரன் கோயில்களுக்குச் செல்லும் போதெல்லாம், ஆதிக்க சாதி வகுப்பினர் அவருக்கு வரவேற்பு அளித்து வரவேற்க நிர்பந்திக்கப்பட்டனர். இதையே காமராஜர் விரும்பியதாக, அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் க.பரமலை ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

2000ம் ஆண்டில் மத்திய அரசு, இரட்டை சீனிவாசன் நினைவாக தபால் தலை வெளியிட்டது. 2011ல், அவர் பிறந்த நாளான ஜூலை 7ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இரட்டைமலை சீனிவாசனின் வரலாறு மிகப் பெரியதும் புரட்சிகரமானதும் என்றாலும், அவர் குறித்த தரவுகள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரது கருத்தாக இருக்கிறது. 1939ல் இரட்டைமலை சீனிவாசன் எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ என்ற சுயசரிதை நூலில், தனது அரசியல் செயல்பாட்டை ஓரளவுக்குப் பதிவுசெய்திருந்தார். அந்த நூல் தான் தமிழில் வெளியான முதல் தலித் சுயசரிதை என்றும் கருதப்படுகிறது. அந்த நூலில், தென்னாப்பிரிக்காவில் கழிந்த அவரது 20 ஆண்டு கால வாழ்க்கை பற்றிய பதிவுகள் அதிகமாக இல்லை என்பதே அதன் முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது. அதே போல, இரட்டைமலை சீனிவாசன் நடத்திய ‘பறையன்’ இதழின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைக்கவில்லை. இதழின் செய்திகள் தொடர்பாக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

இரட்டைமலை சீனிவாசனின் 15 ஆண்டுகால சட்டமன்ற உரைகள், பல்வேறு ஆளுமைகளுடான தொடர்புகள், அரசியல் போராட்டங்கள், முக்கியத் தீர்மானங்கள் ஆகியவை முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. வரலாற்றில் புதைந்திருக்கும் இரட்டைமலை சீனிவாசனின் அனைத்துப் பரிமாணங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதே அவரை படித்த, அவரது வழியில் பயணப்படும் பலரது கோரிக்கையாக இருக்கிறது. அவை தாழ்த்தப்பட்டவர்களுக்காக இரட்டைமலை சீனிவாசனின் போராட்ட வரலாறு குறித்த குறிப்புகள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இந்திய அரசியல் வரலாற்றில் இரட்டைமலை சீனிவாசனின் முக்கிய அங்கமாக இருக்கும் என்பதே உண்மை. படிப்பும் பகுத்தறிவும் ஒருசேர ஒரு மனிதனிடம் இருக்கும்போது தான், அவன் உலகறிய உயர்ந்து நிற்கிறான் என்பதற்கு இக்கால இளைஞர்களுக்கு இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளா: நடைபயணத்தின்போது சிறுமியின் காலில் காலணி மாட்டிவிட்ட ராகுல்காந்தி

EZHILARASAN D

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வழங்கியது கேரளா

Web Editor

’பொன்னியின் செல்வன்’ எப்படி இருக்கிறது? – சோஷியல் மீடியா ரிவ்யூஸ்

EZHILARASAN D