தேசிய கல்விக் கொள்கை நவீன சிந்தனையை வழங்கும்: பிரதமர் மோடி

21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப நவீன சிந்தனையை வழங்கக்கூடியதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற 3 நாள்…

21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப நவீன சிந்தனையை வழங்கக்கூடியதாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற 3 நாள் கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் குறுகிய சிந்தனை மற்றும் செயல்முறையின் வரம்புகளில் இருந்து கல்வியை வெளிக்கொண்டு வந்து, 21ம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் அதனை ஒருங்கிணைப்பதே என்றார்.

வெறும் பட்டப்படிப்புக்காக இளைஞர்களை தயார்படுத்துவதாக கல்வி இருக்கக்கூடாது என தெரிவித்த நரேந்திர மோடி, நாட்டை முன்னேற்றுவதற்குத் தேவையான மனிதவளத்தை தயார்படுத்துவதாக அது இருக்க வேண்டும் என கூறினார். இந்த நோக்கத்திற்கு ஏற்ப நமது புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்காக, நாட்டின் கல்வித் துறையின் உள்கட்டமைப்பில் மிகப் பெரிய மறுசீரமைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்த பிரதமர், தாய்மொழி வழி கல்விக்கு புதிய கல்விக் கொள்கை வழி வகுக்கிறது என்றார். மேலும், சமஸ்கிருதம் போன்ற பண்டைய இந்திய மொழிகளை வளர்க்கவும் இதில் திட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து இந்தியா விரைவாக மீண்டது மட்டுமல்லாமல், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் மாறி இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழல் நாட்டில் உருவெடுத்திருப்பதாகவும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகுவதில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக நமது நாடு திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.