கலவரத்தில் காணாமல் போன ஜெயலலிதா சிலையும், விலை உயர்ந்த நினைவுப் பரிசுகளும்… இத்தனை கலவரத்திலும் எவ்வித சேதமும் அடையாத ஜெயலலிதாவின் புகைப்படம்… விரிவான தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்…
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில் ன்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதல் கலவரமானது. அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அவ்வை சண்முகம் சாலை முழுவதுமே போர்க்களமாகக் காட்சியளித்தது. ஒருவருக்கொருவர் கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் அதிமுக அலுவலகமும் சிக்கி சுக்கு நூறானது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடைபெற்றன. ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றக்கோரி இரு தரப்பும் நீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சாவியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு சாவியும் அலுவலக மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பத்து நாட்களுக்குப் பிறகு அதிமுக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. நிர்வாகிகளால் நிரம்பி வழியும் அதிமுக அலுவலகம் வழக்கத்திற்கு மாறாக அலங்கோலமாக காட்சியளித்தது. ஒருங்கிணைப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், உள்ளிட்ட மூன்று மாடிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் அறைகளின் கதவுகள் கடப்பாறை மூலமாகத் தகர்க்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் இருந்த புகைப்படங்கள், மேஜை, நாற்காலிகள், கணினிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் அனைத்தும் கிழித்து வீசப்பட்டுள்ளன. அலுவலகம் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் கணக்கு அலுவலக அறை இயங்கி வருகிறது. அந்த அறை தான் அதிமுக அலுவலகத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த அறையாக பார்க்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த காலகட்டத்தில் தொடங்கி இறப்பதற்கு முன்னதாக வரை ஜெயலலிதா பெற்ற நினைவுப் பரிசுகள் அந்த அறையில் தான் வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஜெயலலிதாவின் சிலை, வெள்ளி செங்கோல், வாள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையும் கடப்பாறை மூலம் உடைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. அறையில் இருந்த விலையுயர்ந்த பொருட்களும் கலவரத்தில் காணாமல் போனதாக தலைமை அலுவலக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கணக்கு அலுவலக அறையில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த நிலையில், அந்த அறையில் இருந்த பொருட்கள் திட்டமிட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக அலுவலகத்தின் இன்றைய நிலை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த முறை நீதிமன்றத்தில் வழக்கு வரும் பட்சத்தில் அதனை ஆவணமாக தாக்கல் செய்யவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. காணாமல் போன ஆவணங்கள், சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. ஓரிரு தினங்களுக்குள்ளாக அதிமுகவை சீரமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. பொதுச்செயலாளர் அறை புதுப்பொழிவுடன் தயாரான பின்னர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க உள்ளார்.
-விக்னேஷ்









