கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு…

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த 2011ஆம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரைத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பும், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இன்று காலை தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்ததாவது:

“அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. 1989 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, ராயல்டி என்பது வரி என்று கூறியது தவறானது.

மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது. குத்தகை பணம்தான். கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.

சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அதேபோல், நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.