மாநிலங்களவை தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. தமிழ்நாட்டில், திமுகவின்…

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. தமிழ்நாட்டில், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

மேலும், விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த 57 மாநிலங்களவை இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தலை சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், துணைச் செயலாளர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் இன்று முதல் 31ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பு மனு பரிசீலனை ஜூன் 1ம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்​ கொள்வதற்கான கடைசி நாளாக ஜூன் 3 அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் 27 ம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளனர். அதிமுக சார்பாக 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளரும் அறிவிக்கப்படவுள்ளது.

1988 முதல் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவர் 230வது முறையாக தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.