மாணவர் சேர்க்கை இல்லாததால் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக செய்தி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
”கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம் என்று தினமும் பேட்டி அளிக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? கல்வித் துறையை, கடந்த 51 மாத முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள். இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் 17, சிவகங்கை 16. திண்டுக்கல் 12. சென்னை -10, ஈரோடு – 10, மதுரை 10. கோவை 9. ராமநாதபுரம் 9. தூத்துக்குடி தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா 7, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 6 என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகளை இந்த ஸ்டாலின் அரசு மூடியுள்ளது. இந்த 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால்’ மூடப்பட்டு வருவதாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனது தலைமையிலான அரசு, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு மடிக் கணினி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு மடிக் கணினி, படித்த ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் என்று பல திட்டங்களை செயல்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தது.
ஆனால், தி.மு.க. அரசோ,கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஒடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







