மாநிலங்களவை 3 வேட்பாளர்கள் பொறுப்பும் மு.க.ஸ்டாலினின் மெகா ப்ளானும்

திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. கவுன்சிலர் முதல் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் வரை பணம் செலவழிப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப்படும் என்ற விமர்சனம் உள்ள நிலையில் அதனை பொய்யாக்கும் வகையில் வெளியாகியுள்ளது திமுக எம்.பி.…

திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. கவுன்சிலர் முதல் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் வரை பணம் செலவழிப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப்படும் என்ற விமர்சனம் உள்ள நிலையில் அதனை பொய்யாக்கும் வகையில் வெளியாகியுள்ளது திமுக எம்.பி. பட்டியல்.

தேர்தலில் பணம் செலவழிப்பவர்களுக்கு மட்டுமே கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட அனுமதி அளிக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் பல தேர்தல்களில் திமுக மீது சொல்லப்படுகிறது. இது போன்ற விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கவே, தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.என்ன செய்தார்கள் அறிவிக்கப்பட்ட புதிய எம்.பிக்கள்:
மு.க. ஸ்டாலின் பட்டியலிட்ட தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோரின் சுயவிவரத்தை பார்த்தாலே அவர்களின் கட்சி வளர்ச்சிக்கான பங்களிப்பை புரிந்து கொள்ள முடியும்.

45 வயதான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.காம், டி.சி.எம். படித்துள்ளார். ராஜேஸ்குமார் 2020 முதல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியிலும் பொறுப்பு வகித்தார். ராஜேஸ்குமாருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் தான் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை எம்.பி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பம்பப்படையூரில் வசித்து வருகிறார். 81 வயதான இவர் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வருகிறார். கல்யாண சுந்தரம் 1986ல் கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர். 1997ல் மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவர். 2006ல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
அதே போல இரா.கிரிராஜன் சென்னை கொளத்தூரை சார்ந்தவர். இவர் திமுகவில் சட்டத்துறை செயலாளராக கடந்த 2015 முதல் இருந்து வருகிறார். 2009ல் சட்டத்துறை இணை செயலாளராகவும் பதவி வகித்தார். 2001 முதல் 2005 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராவும் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 6 மாதம் மண்டலகுழு தலைவராகவும் பதவி வகித்தார். 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டா

விமர்சனங்களுக்கு விடை அளிக்கும் ஸ்டாலின் :
சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சூர்யா சிவா திமுக மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். கட்சியில் தாம் பல ஆண்டுகள் உழைத்ததாகவும் ஆனால், அதற்கான உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் திமுக தலைமை தனக்கு தரவில்லை எனக் கூறினார். இதே போல், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி. துரைசாமி கூட இதே குற்றச்சாட்டை தான் திமுக தலைமை மீது கடுமையாக சாட்டினார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த கு.க. செல்வம் கூட பாஜகவில் இணைந்த போது கட்சியில் உழைத்தேன் அங்கீகாரம் இல்லை என்று கூறினார். தற்போது அவர் மீண்டும் திமுகவிற்கே திரும்பிவிட்டார் அது வேறு கதை.  இந்த பின்னணிகளின் அடிப்படையில், திமுக மீதான பொதுவான விமர்சனம் பணம் வைத்திருப்பவர்கள், அதிகாரம் மிக்கவர்களுக்கு தான் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் கொடுக்கப்படும் என்று பாஜக,அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் விமர்சனத்தை முன்வைத்தார்கள். இது போன்ற விமர்சனங்களுக்கு முடிவு கட்டவே தற்போது மாநிலங்களவையில் காலியாக உள்ள 3 இடங்களை, திமுக வளர்ச்சிக்காக நீண்ட காலம் உழைத்த சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோருக்கு திமுக தலைமை ஒதுக்கியுள்ளது.

அமைச்சர்கள் VS மாவட்ட செயலாளர்கள்:
கட்சியில் உழைப்பவர்களுக்கு திமுக அங்கீகாரம் கொடுக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ள இந்த திட்டம் கட்சியினரை சமாதானப்படுத்துமே தவிர பிரச்னையை தீர்க்காது என்று அரசியல் கூர் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திமுகவில் பொறுப்புகளைப் பெற செலவு செய்வார்களா என்ற பிரச்னை எல்லாம் இப்போது தான் வருகிறது. திமுகவின் தலைவராக கருணாநிதி இருந்த போது மாவட்ட செயலாளர்களுக்கு தான் அதிக அங்கீகாரமும் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும். கருணாநிதி காலத்தில் கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பொறுப்பு கொடுக்கப்படும். அமைச்சர்களை விட மாவட்ட செயலாளர்களுக்கு தான் அதிகாரம் கூடுதலாக இருக்கும். இந்த கட்டமைப்பை திமுக இழந்துவிட்டது. மாவட்ட செயலாளர்களை விட அமைச்சர்கள் கூடுதல் அதிகாரம் பொறுந்தியவர்களாக திமுக கட்சி அதிகார பொறுப்பில் இருக்கிறார்கள். அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட அது வெளிப்பட்டதை பார்க்கலாம். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் கூட கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் விட்டுக்கொடுக்காமல் போட்டி வேட்பாளர்களைக் களமிறக்கி திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர். அப்போது, திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை என்ற பேச்சு எழுந்தது. ஒட்டுமொத்தத்தில், தொடர்ச்சியாக திமுக மீது தொடரும் இந்த விமர்சனத்தை ஸ்டாலின் மாற்றுவதற்காக தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து, கட்சிக்காக உழைத்த 3 பேருக்கு மாநிலங்களவை பொறுப்பைக் கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.