இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா 2.2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்கள் என 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குல் குறித்து உளவு தகவல்கள் அளிக்கப்பட்டும் அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் மைத்ரி பால சிறிசேனா உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக மைத்ரி பால சிறிசேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா தலைமயிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், தீவிரவாத தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும் அதை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக முன்னாள் அதிபர் சிறிசேனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2.2 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும். பாதிக்கப்ட்டவர்களின் அடிப்படை உரிமையை மீறியததற்காக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காவல்துறை தலைவர், உளவுத்துறை முன்னாள் தலைவர், பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆகியோரும் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.







