தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சுப கிருது ஆண்டு நிறைவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் பழங்கள், இனிப்புகள் உள்ளிட்டவை வைத்து வழிபாடு செய்த பிறகு, பொதுமக்கள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னை வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு, பஞ்சாங்கம வாசித்தல் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, திருத்தணி முருகன் கோவிலில், இன்று காலை 6 மணி முதல் இரவு முழுதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி, நள்ளிரவு, 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, இரவு 8:45 மணி வரை கோவில் நடை தொடர்ந்து திறந்திருக்கும். 38 மணி நேரம் தொடர் தரிசனம் நடைபெற்று வருவதால் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி, உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தமிழ் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்பாள் வைர கிரீடத்துடனும், சுந்தரேஸ்வரர் வைர நெற்றிப்படையுனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் அரிய நிகழ்வான சூரிய ஒளி சுவாமி மீது விழும் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆதி பராசக்தி பீடத்தில் பாரம்பரிய கனி காணும் நிகழ்ச்சியோடு, பக்தர்களுக்கு கைநீட்டமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, கூட்டு தியான பிரார்த்தனை நிகழ்வும் நடைபெற்றது. இதேபோன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உட்பட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயர் கோயிலில், தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள, தென் மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர். தமிழ் புத்தாண்டை தினத்தில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து
உற்சவ தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர். பெண்கள் அகல்விளக்கு, மா விளக்கு தீபம் ஏற்றி ஶ்ரீ முத்துமாரி அம்மனை வழிபட்டனர் .
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருச்சி உறையூர் காவல் தெய்வமான வெக்காளியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சரியாக 10 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுத்துவரப்பட்ட நிலையில் 4 ரத வீதிகளில், எழில் மிகு காட்சியுடன் வெக்காளியம்மன் வீதி உலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் காவிரி ஆற்றங்கரையில் இருந்து, பால் குடங்களை எடுத்து வந்தும், அக்னி சட்டைகளை ஏந்தியவாறும் வெக்காளியம்மன் ஆலயத்தை வளம் வந்து தங்களது நேர்த்தி கடங்களை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். வெக்காளியம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 200க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா