கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை 15 நிமிடங்கள் போராடி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர்.
கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்திற்கு எதிர்ப்புறம் தனியார் வங்கி உள்ளது. இங்கு கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். வங்கியின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தில் இரண்டரை அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வெளியே வந்த போது வாகனத்தின் உள்ளே பாம்பு நெலிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டப் பின் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள், இருசக்கர வாகனத்தின் உள்ளே புகுந்து கொண்ட பாம்பை சுமார் 15 நிமிடம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட அந்த பாம்பை சாக்குப் பையில் கட்டி எடுத்துச்செல்லப்பட்டு காட்டுப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
—–சௌம்யா.மோ






