இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுக்க சிறப்பு பிரதிநிதி: நியமித்தது கனடா அரசு

இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுப்பதற்காக கனடா அரசு முதல் சிறப்பு பிரதிநிதியை நியமித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கனடாவின் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தொடர்ச்சியான கொடிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூன் 2021…

இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுப்பதற்காக கனடா அரசு முதல் சிறப்பு பிரதிநிதியை நியமித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, கனடாவின் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தொடர்ச்சியான கொடிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜூன் 2021 இல், லண்டன், ஒன்டாரியோவில் ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஒரு தனி நபரால், டிரக்குடன் வந்து மோதி கொல்லப்பட்டனர். அதே போல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கியூபெக் நகர மசூதியில் நடந்த தாக்குதலில் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இப்படி கனடாவில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, வெறுப்பு மற்றும் பாகுபாட்டைத் தடுக்கும் விதமாக பல முயற்சிகளை கனடா அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறுகளை தடுப்பதற்காக கனடா அரசு முதல் சிறப்பு பிரதிநிதியை நியமித்துள்ளது.

இது குறித்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இஸ்லாமோஃபோபியாவிற்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு ஆலோசகராக , நிபுணராக மற்றும் பிரதிநிதியாக பணியாற்றுவதற்கு மனித உரிமை ஆர்வலர் அமிரா எல்காவாபி பொறுப்பேற்பார்” என்று அறிவித்துள்ளார் .

பத்திரிகையாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான அமிரா எல்கவாபி கனடிய ரேஸ் ரிலேஷன்ஸ் அறக்கட்டளையின் தகவல் தொடர்புத் தலைவராகவும், டொராண்டோ ஸ்டார் செய்தித்தாளின் கட்டுரையாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு பொது ஒளிபரப்பு சிபிசியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் உள்ளார்.

இந்த நியமனம் குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசும் போது “பன்முகத்தன்மை உண்மையிலேயே கனடாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். அந்த வகையில் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அதன் அனைத்து வடிவங்களுக்கு எதிரான நமது போராட்டத்தில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான படி என்று கூறினார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.