நேரடி பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தகுதி இருந்தும் தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும்,…

நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தகுதி இருந்தும் தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கால் மேற்கொள்ளபட்ட நியமனங்களை ரத்து செய்யக் கோரி ஈஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அதிமுக ஆட்சியின்போது கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, 440 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்தபட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், யாருக்கும் சலுகை காட்டப்படவில்லை. உரிய தேர்வு நடைமுறை, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியே நியமனங்கள் வழங்கப்பட்டன என்று கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருணை அடிப்படையில் 2016 ம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட மனுதாரர், இளநிலை பொறியாளர் தேர்வு நடைமுறைகளில் கலந்துகொள்ளாத நிலையில் வழக்கு தொடர முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். மேலும், நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.