ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில்,…

பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை கோட்டத்தில் முதல் முறையாகப் பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில் பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ‘பெருநிறுவன சமூகப் பொறுப்பு” (Corporate Social Responsibility) திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரலில் ரேனால்ட் நிசான் நிறுவனமும், சென்னை எழும்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனமும் அமைத்துள்ளன. இந்த வரைபட வசதி, பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு, மற்றவர்கள் உதவியில்லாமல் தாங்களே ரயில் நிலையத்திற்குள் தேவைப்படும் இடங்களுக்குச் சென்று அதன் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் எனச் சொல்லப்படுகிறது.

மேற்கண்ட ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள 3×3 அடி அளவுள்ள இந்த பிரெய்லி வரைபடம் அந்தந்த ரயில் நிலையங்களின் மேற்பார்வையை அளிக்கும். மேலும், அடிப்படை வசதிகளைப் பட்டியலிட்டு, பயணிகள் போக விரும்பும் டிக்கெட் கவுண்டர்கள், நடைமேடைகள், பாதசாரி பாலங்கள், மற்றும் பல இடங்களை அடைய வழியைக் காட்டுகிறது. இந்த பிரெய்லி வரைபடத்தில் ‘கியூ ஆர் கோடுகள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியைத் தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள் என்னென்ன?’

பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு, நடைமேடைகளைப் பாதுகாப்பான இடமாக மாற்ற நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டுணரும்படியான டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன. பார்வை திறன் சவாலுடைய பயணிகளின் பாதுகாப்புக்காகச் சென்னை கோட்டம் முழுக்க பாதசாரி பாலங்களின் படிக்கட்டுகளில் பிரெய்லி பொறிக்கப்பட்டுள்ள துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கோட்டம் பார்வையற்ற பயனாளிகளுக்கு பிரெய்லி வரைபட பலகை சேவையைப் பின்வரும் காலங்களில் அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மாற்றுத் திறனாளி பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து, அவர்களின் பயணத்தைப் பாதுகாப்பாகவும், இனிதாகவும் மாற்றச் சென்னை கோட்டம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.