டெல்லியில் எம்எல்.ஏக்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் மசோதா அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி சட்டசபை இன்று கூடியது. முதல் நாள் சிறப்பு அமர்விலேயே, எம்.எல்.ஏகளுக்கு இரண்டு மடங்கு சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது எம்.எல்.ஏகளுக்கு 66.67 சதவீதம் சம்பளம் உயர்த்தும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது, டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.52,000 சம்பளமாக உள்ளது. அதில் ரூ.12,000 அடிப்படை ஊதியமாகவும், மற்றவை இதர சலுகையில் அடங்கும். புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும்பட்சத்தில் டெல்லி எம்.எல்.ஏக்கள் மாதம் ரூ.90,000 சம்பளமாக பெறுவார்கள். ரூ.30,000 அடிப்படை ஊதியமாகவும் மற்றவை இதர சலுகையில் அடங்கும். முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோரின் ஊதியம் ரூ. 72 ஆயிரத்தில் இருந்து ரூ.1,70,000 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி எம்.எல்.ஏக்களுக்கு கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2015ம் ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு மாதம் ரூ.2.10 லட்சம் சம்பளம் உயர்த்தும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கடந்த மே மாதமே, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில எம்.எல்.ஏக்கள் மாதம் சராசரியாக ரூ.2 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர். அதனால் எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கும்பட்சத்தில் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும்.
-ம.பவித்ரா