எஸ்.எஸ் ஐதராபாத் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் இருந்ததாக வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரண். வழக்கறிஞரான இவர் ஸ்விகி ஆப் மூலம் சிக்கன் பிரியானியும் (ரூ. 299) சிக்கன் லாலிபாப்பும் (ரூ. 310) மதியம் 1:30 மணி அளவில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் உணவு டெலிவெரி செய்யப்பட்ட நிலையில், பிரியாணியில் இருந்து கெட்டுப்போன நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, சிக்கன் லாலிபாப்பூம் அதேபோல துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த ஹரிஹரண் உணவகத்தின் நிர்வாகத்தை நேரில் வந்து விளக்கம் கேட்டுள்ளார். கெட்டுப்போனதை நிர்வாகம் ஒத்துக்கொண்டு வேறு உணவு தருவதாகக் கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஹரிஹரண் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்துள்ளார். 6 லாலிபாப் துண்டுகள் இருக்குமிடத்தில் கிட்டதட்ட இரண்டு துண்டுகள் கெட்டுப்போன துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை செய்த பின்னரே இதில் எந்த அளவு கெட்டுப்போன பொருட்கள் உள்ளது என்பது தெரியவரும். போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா








