2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் பாணினி எழுதிய ஓர் இலக்கணச் சிக்கலுக்கான பொருளை இந்திய ஆய்வு மாணவர் ஒருவர் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.
சமஸ்கிருத மொழியின் தந்தை என்று போற்றப்படும் பாணினி, 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என வரலாற்று அறிஞர்களால் கருதப்படுகிறார். இவர் சமஸ்கிருத மொழிக்கான இலக்கண நூலை எழுதியுள்ளார்.
பல்லாண்டுகளாக பாணினி எழுதிய இலக்கணம் தொடர்பான சிக்கல் ஒன்று மொழியியல் அறிஞர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், அதற்கான விடையை ரிஷி அடுல் ராஜ்போபட் என்ற 27 வயதான இந்திய ஆய்வு மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கல்வி குறித்த பிஎச்டி மாணவரான அவர், பாணினி எழுதிய எழுத்துக்களின் உண்மையான பொருளைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். அவருடைய இந்த கண்டுபிடிப்பு சமஸ்கிருதத்தை கற்று அறிவதில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என சமஸ்கிருத அறிஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.







