தேச பாதுகாப்பிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டால் அந்த சமூக வலைத்தளம் தடை செய்யப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையிலும், அவர்களது புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை ஒண்டி வீரன் நினைவு தபால்தலை வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆசாதிகா அம்ருத் மஹா உற்சவத்தில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களையும், அறியப்படாத தலைவர்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், வரும் 25 ஆண்டுகள் இந்தியா வளமையாக, ஆற்றல் மிக்க நாடாக இருக்க அனைவரும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் தூர்தர்ஷனில் நாளை முதல் 75 வாரங்கள் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளதாகக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘எலி பேஸ்ட் மற்றும் சாணி பவுடர் விற்பனைக்குத் தடை?’
அதேபோல, சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களை நினைவு கூறும் வகையில் திருநெல்வேலியில் 10 நாட்கள் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மூலமாக நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக இந்திய ராணுவத்துக்கு எதிராக இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஒரு மாதமாக 100-க்கும் மேற்பட்ட YouTube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நேற்றும் இந்திய நாட்டிற்கு எதிராக, தேசத்திற்கு எதிராகக் கருத்துக்களைச் சொன்ன 10 சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், சில சமூக ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அங்கிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். தொடர்ந்து தேசத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடும் எந்த YouTube ஆக இருந்தாலும், எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.








