ராணுவத்தில் பணிபுரிவது அனைத்துக்கும் மேலானது: ராஜ்நாத் சிங்

ராணுவப் பணி என்பது சேவை, தொழில் என அனைத்துக்கும் மேலானது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு வருகை தந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

ராணுவப் பணி என்பது சேவை, தொழில் என அனைத்துக்கும் மேலானது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு வருகை தந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது, இளம் வயதில் தானும் ராணுவத்தில் சேர விரும்பியதாகக் குறிப்பிட்டார். இதற்காக எழுத்துத் தேர்வு எழுதி முடித்ததாகவும் எனினும், தந்தையின் மறைவு உள்ளிட்ட குடும்ப சூழல் காரணமாக தன்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை என கூறினார்.

ஒரு குழந்தைக்கு ராணுவ உடையை அணிவித்துப் பார்த்தால், அதன் தனித்துவம் மாறுவதை பார்க்க முடியும் என தெரிவித்த ராஜ்நாத் சிங், ராணுவ உடையில் ஏதோ இருக்கிறது என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல மாதங்கள் நீடித்ததை குறிப்பிட்டுப் பேசிய ராஜ்நாத் சிங், அப்போது எல்லையில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் அசாத்தியமானது என்றார்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த தகவல் முழுமையாக கிடைக்காத நிலையிலும் நமது ராணுவ வீரர்கள் அர்ப்பணிப்புக்குத் தயாராக இருந்ததை தான் பார்த்ததாகவும், நமது ராணுவ வீரர்களுக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் என பலரும் நாட்டிற்கு சேவை செய்தாலும், தன்னைப் பொறுத்தவரை ராணுவ வீரர்களின் பங்களிப்புக்கு எதுவும் ஈடாகாது என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். அவர்களின் பங்களிப்பு சேவைக்கும் மேலானது, தொழிலுக்கும் மேலானது என அவர் தெரிவித்தார்.

வட கிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பல தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் அந்த பாதையை கைவிட்டு, சகஜ வாழ்க்கைக்கு வந்ததற்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் மிக முக்கிய காரணம் என தெரிவித்த ராஜ்நாத் சிங், வட கிழக்கை கண்காணிக்கும் மிக முக்கிய பொறுப்பை அஸ்ஸாம் ரைபிள்ஸ் சிறப்பாக மேற்கொண்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.