பாகிஸ்தான் ஜிந்தாபாத், வாழ்க என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில்
பதிவிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சமூக
ஆர்வலர் பிரகாஷை வளவனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை அழைத்துச் சென்று கலந்த கொண்டு நாடாளுமன்றத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 140 இடங்கள் வாங்கி தந்த முகமது
அலி ஜின்னா வாழ்க, பங்காளி நாடான பாகிஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் ஜிந்தா பாத் என
கடந்த 75வது சுதந்திர தினத்தன்று விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சார்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில் பங்காளி நாடு வாழ்க என கூறுவதால் தன்னை விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா எந்த சட்டப்பிரிவின் கீழும் கைது செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் வளவனூர், விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள அரசு கட்டட சுவர்களிலும், சாலையை ஆக்கிரமித்தும் பேனர்கள் வைத்திருந்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலரான பிரகாஷ், நீதிமன்ற தடையை மீறி வைக்கப்பட்ட பேனரை அகற்றகோரி விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தலையில்லா பொம்மையை வயல் வெளியில் வைத்து நூதன முறையில், ’என் புகார் மீது எஸ்.பி நடவடிக்கை
எடுக்காததால் நீயாவது நடவடிக்கை எடு’ என்று கூறி, நான்கு சாட்டை அடி கொடுத்து
முறையீடு செய்து, வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து வளவனூர் போலீசார் சமூக ஆர்வலர் பிரகாஷ் மீது சுதந்திர தினத்தன்று பேசிய வீடியோவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாக வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனர்.









