சமூகவலைதளங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த பாஜக பெண் பிரமுகரை விசாரிக்க ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் உமா காா்கி. 56 வயதான இவர் பாஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர். இவா், பாஜக மற்றும் பிரதமா் மோடி தொடா்பாக ஆதரவு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருபவர். அதே நேரத்தில் திமுக, பெரியாா், மணியம்மை, நடிகா் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினா் தொடா்பான சா்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் தொடா்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக, கடந்த திங்கள்கிழமை கோவை சைபா் கிரைம் காவல்நிலையத்தில், கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் ஹரீஷ் புகாா் அளித்தார். இதன்பேரில் சைபா் கிரைம் போலீஸாா், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து உமா காா்கியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து உமா காா்கி, கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில், உமா கார்கியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் கோரிய நிலையில், இன்று மாலை 5 மணிவரை விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் அனுமதி வழங்கியுள்ளது.







